சென்னை: ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து, அதற்குரிய ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களில் நாளை மறுநாள் (பிப்.15) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மேலும், பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகையால், தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.13) அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்க அமைச்சர்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்; ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை