வேலூர்: மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18 சதவீதம் வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு சார்பில், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேல் கூறுகையில், "வணிக பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி என்பதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்; ஆயத்த ஆடைகளுக்கு 28 சதவீதம் வரி விதிப்பதை கைவிட வேண்டும்; சொத்து வரி உயர்வை ஆண்டுதோறும் உயர்த்தும் மாநில அரசு அதனை கைவிட வேண்டும்.
மேலும், மாநிலம் முழுவதும் குப்பை வரியை ஒரே சீராக சீரமைக்க வேண்டும்; உள்ளாட்சி கடைகளுக்கான பெயர் மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை மீண்டும் பெயர் மாற்றத்தை அனுமதிக்க வேண்டும்; கார்ப்பரேட் நிறுவனங்கள் வணிக நிறுவனங்களின் சிறப்பு சட்டம் இயற்றி உள்நாட்டு சில்லறை வணிகத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர்" என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேல் தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில இளைஞரணி செயலாளர் அருண் பிரசாத் மற்றும் வேலூர் மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மயிலாப்பூர் ரயில் நிலைய கொலை.. சிசிடிவி-யில் தெரிந்த நபரை வைத்து கொலையாளியை பிடித்த போலீஸ்!
இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மார்க்கெட் தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் முகமது பரூக் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18 சதவீதம் வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்; மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும், உதகை, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்ட வணிகர்கள், வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்; குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவித்திட வலியுறுத்திக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.