சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில், ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதாக அரசாணை 151ஐ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரை, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அகிலன் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அகிலன் கூறியதாவது, “முதுகலை மேற்படிப்பில் 8 பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதாக அரசாணை 151-ஐ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு முதுகலை படிப்புகளில் வழங்கப்படும் 50 சதவீதம் இடதுக்கீடு ரத்து செய்யப்பட்டால், கிராமப்புற பகுதியில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை, உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்பை பெற்று, அதன் அடிப்படையில் தமிழக அரசு போடப்பட்ட அரசாணை 463-ஐ சட்டமாக இயற்ற வேண்டும்.
இது குறித்து சுகாதரத்துறை செயலாளர், சுமூகமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், முதுகலை மேற்படிப்பில் 8 பாடப் பிரிவுகளைத் தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதாக அரசாணை 151ஐ மறு பரிசீலனை செய்யப்படும் என நம்புகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: "அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும்" - மருத்துவ சங்கம் வலியுறுத்தல்! - GO Number 151