சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் 22 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டனர். அதன்படி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருவண்ணாமலை, பொள்ளாச்சி, ஆரணி, தேனி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதூர், சேலம், பெரம்பலூர், காஞ்சிபுரம், நாமக்கல், தூத்துக்குடி, அரக்கோணம், ஈரோடு, தென்காசி, வேலூர், நீலகிரி, தருமபுரி, கோவை மாற்றம் தஞ்சாவூர் ஆகிய 22 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல, திமுக கூட்டணியில் காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், விசிக 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும், மதிமுக 1 தொகுதியிலும், ஐயுஎம்எல் 1 தொகுதியிலும் போட்டியிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல எதிர் அணியில் போட்டியிட்ட அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தோல்வியுற்றன.
அந்த வகையில், 2024 பொது தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட பிரதான கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு சதவீதம்
திமுக: 26.93%
அதிமுக: 20.46%
பாஜக: 11.24%
காங்கிரஸ்: 10.67
நாம் தமிழர்: 8.21%
தேமுதிக: 2.59%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: 2.52%
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: 2.15%
ஐயுஎம்எல்: 1.17%
பகுஜன் சமாஜ் கட்சி: 0.31
இதில் பாரதிய ஜனதா கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியை விட கூடுதல் வாக்குகள் பெற்று வாக்கு சதவீதத்தில் உயர்வை கண்டுள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சிக்கும் கணிசமான வாக்குகள் அதிகரித்துள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரு தொகுதிகளில் வென்றுள்ளதால் அந்த கட்சிக்கு மாநில கட்சிக்கான அந்தஸ்து கிடைக்கும் நிலையை அடைந்துள்ளது. அதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6.58 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி தற்போது 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுக, பாஜகவை பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர்.. தொகுதி வாரியாக வாக்கு விபரம்.. மாநில கட்சி அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு!