தமிழ்நாடு: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அஸ்வத்தாமன், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளான கசிநாயக்கன்பட்டி, பெரிய கரம், மானவள்ளி கெஜல்நாயக்கன்பட்டி, கந்திலி, சின்னக்கந்திலி, கும்மிடிகாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கும்மிடிகாம்பட்டி பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது சாலையின் ஓரத்தில் தர்பூசணி கடை வைத்துக் கொண்டிருந்த நபரிடம் தர்பூசணி பழங்களை வாங்கி, அதனை வெட்டி அப்பகுதி மக்களுக்குக் கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார். இதில், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை திருப்பத்தூர் நகரப் பகுதிகளான தூய நெஞ்சக்கல்லூரி, நகைக்கடை பஜார், கோட்டை தெரு, சின்ன கடைத் தெரு, ஹவுசிங் போர்டு, அவ்வைநகர், வள்ளுவர் நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வள்ளுவர் நகர்ப் பகுதியில் வாக்கு சேகரித்து பின்னர் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் பேசி கிரிக்கெட் விளையாடி நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார், விளையாட்டு மைதானத்திற்குச் சைக்கிளில் வந்த அவர், கூடைப்பந்து விளையாடி அங்கிருந்த விளையாட்டு வீரர்களிடம் வாக்கு சேகரித்தார்.
பின் அங்குள்ள மூலிகை சூப் விற்பனை கடையில் ஆதரவாளர்களுக்கு மூலிகை சூப் வழங்கி தானும் பருகினார். பின்னர் சொந்த கிராமமான தென்னங்குடிக்கு மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பில் தஞ்சை எம்எல்ஏ நீலமேகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: "பாஜகவுடன் எனக்கு ஒத்துப்போகவில்லை" - வீரப்பன் மகள் மனம் திறந்த பேட்டி! - Veerappan Daughter In Politics