சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று (டிச.9) காலை 9.30 மணியளவில் துவங்குகிறது. மொத்தம் 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். மேலும், சமீபத்தில் மறைந்த ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, வினா விடை நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்கும் நிகழ்வு நடைபெறும். அதன் பின்னர், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2024 - 2025 ஆம் ஆண்டின் கூடுதல் செலவினத்திற்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். அதனைத் தொடர்ந்து, அரசின் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
பின்னர், மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்வும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவதற்கான அறிவிப்பு; சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடம்பெறுமா?
அதனைத் தொடர்ந்து, வெள்ளம் தொடர்பான பிரச்சனை, பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரம், சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கேள்விகளை எதிர்க்கட்சியினர் எழுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.