சென்னை: தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகையாளர் நலன் கருதி, பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழைத்திருத்துபவர்கள் ஆகியோர் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியை உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
அதுகுறித்து வெளியான அரசாணையில், '' அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000 என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும். போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000 என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000 என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2,50,000 என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையினைப் பெற்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க: "எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" - அமித்ஷா பேச்சுக்கு விஜய் கண்டனம்!
பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவே இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் பரிசீலிக்கும். அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆணைகள் வெளியிடப்படும். இத்திட்டத்திற்கான செலவினங்கள் "முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில்" இருந்து வழங்கப்படும்.
இக்குடும்ப உதவி நிதி திட்டம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் அமல்படுத்தப்படும். இவ்வாணை நிதித்துறையின் அலுவல் சார்பற்ற குறிப்பு எண்.714/JS(PAP)/CMPRF/24 நாள். 18.12.2024-ல் பெறப்பட்ட ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது'' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வருக்கு நன்றி: தங்களது கோரிக்கையை ஏற்று, பத்திரிகையாளர் குடும்ப நல நிதியினை இருமடங்காக உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.