சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினை இரண்டாக பிரித்து மத்திய அரசின் வர்த்தக்கத்துறையின் அனுமதியை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியம் 1957-ஆம் ஆண்டு ஜுலை 1ஆம் தேதி மின்சாரம் (வழங்கல்) சட்டம் 1948 பிரிவு 54-ன் கீழ் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மானப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிறுவனமாக இயங்கி வருகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு மின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் என நவம்பர் 2010 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு தேவையான மின்சாரத்தை அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், எரிவாயு மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, தாவரக்கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினை, தமிழ்நாடு மின் உற்பத்தி கார்ப்பரேஷன் லிமிடெட், தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என பிரித்ததற்கு தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை ஜனவரி 2024ல் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில், மத்திய அரசின் வர்த்தகத்துறை விதிகளின்படி செயல்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கார்ப்பரேஷன் விதிமுறைகளின் படி, அனைத்து தொடர்புகளையும், பெயர் பலகையையும் மாற்ற வேண்டும். இனிமேல் போடப்படும் ஒப்பந்தம், டெண்டர் அனைத்தும் தமிழ்நாடு பவர் டிஸ்ட்ரிபூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் என இருக்க வேண்டும். இந்த நிறுவனத்தின் பெயரில் TAN எண் மற்றும் GSTIN ஆகியவற்றை பெற வேண்டும்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயம்புத்தூரில் மார்கதர்சி சிட் ஃபண்ட் புதிய கிளை திறப்பு