சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என் ரவி 4,669 மாணவர்கள்களுக்கு இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் பட்டங்களை வழங்கினார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா பெருங்குடி வளாகத்தில் இன்று (செப்.29) நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி இளநிலை, முதுநிலை படிப்பை முடித்த 4,699 மாணவர்களுக்கும், 18 ஆராய்ச்சிப் படிப்பினை முடித்தவர்களுக்கு முனைவர் பட்டங்களையும் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா வரவேற்பு உரையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்தோஷ்குமார் பேசியதாவது, "14-வது பட்டமளிப்பு விழாவில் 4,669 மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள். 15 உறுப்பு கல்லூரிகள், 12 தனியார் கல்லூரிகள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது. 4 ஆயிரம் மாணவர்கள் இந்த வளாகத்திலும், 25 ஆயிரம் மாணவர்கள் மாநிலம் முழுவதும் பயின்று வருகின்றனர். 300 மாணவர்கள் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் அதிக ஆராய்ச்சி மாணவர்கள் கொண்ட பல்கலைக்கழகமாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. 230 சிவில் நீதிபதிகளுள் 75 நீதிபதிகள் சீர்மிகு சட்ட பல்கலையில் பயின்றவர்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதிலளிப்பேன்"- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
அதைத் தொடர்ந்து மேடையில் சிறப்புரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், "கேடில் விழிச்செல்வம் குறளை சொல்லி உரையை துவங்கினார். மாணவர்களின் கடின உழைப்பை போற்றும் தினமாக இன்றைய தினம் அமைந்துள்ளது. இன்று பட்டங்களை பெறும் மாணவர்களின் பட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அம்பேத்கர் அனைவருக்கும் நீதி என்பதனை வலியுறுத்தினார். குறிப்பாக யாரால் சட்ட உதவியை நாட முடியாதோ அவர்களுக்கு நீதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். அதனை பின்பற்றி மக்களுக்கு உறுதுணையாக சட்டப்படிப்பை பயின்ற பட்டதாரிகள் இருக்க வேண்டும்.
தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி அடுத்த படியை அடைய வேண்டும். சட்டத்துறைக்கு வந்துள்ள மாணவர்கள் சட்டம் மட்டுமல்ல சமூக பிரச்சினைகள், மனித உரிமை மீறல்களை காத்தல், பாலின வேறுபாடுகளை களைத்தல் என அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். தெரிந்து தேர்ந்த செயலில் ஈடுபட வேண்டும். அப்படியானவர்களுடன் ஒருங்கிணைந்து சட்ட வேலைகளில் ஈடுபட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, 18 முனைவர் பட்ட மாணவர்களுக்கும், பல்கலைக்கழக வளாகத்தில் பயின்ற 990 இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மாணவர்களுள் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை ஆளுநர் வழங்கினார். இந்த நிகழ்வில் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், தமிழ்நாடு சட்ட அமைச்சருமான ரகுபதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்