சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூன் 5ஆம் தேதி மாலை, 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரம்பூர், செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜான் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கக் கோரி அவரது மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாகத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தித்த முதல்வர்#Armstrong #BSPArmstrong #ArmstrongWife #Murdercase #CMMKStalin #Condolence #ETVBharatTamil pic.twitter.com/734e2Oqacz
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) July 9, 2024
முதலமைச்சர் நேரில் அஞ்சலி: இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர், ஆம்ஸ்ட்ராங் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் "ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் அனைவரும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்" என உறுதியளித்தார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: "வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?" - ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் தமிழக அரசை விளாசிய பா.ரஞ்சித்!