தருமபுரி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முடிவடைந்த பணிகளை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசின் சேவைகளை மக்களுக்கு விரிவாக சேர்த்திட மக்களை நாடி செல்லும் தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்களை ஒன்றான 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தினை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டம் இன்று தொடங்கி 04.09.2024 வரை நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் 70 முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரிடம் இம்முகாம்களில் எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட 15 அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 44 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை முகாம்களில் பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, உயர்கல்வித்துறை, பால்வளத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சித்துறை, ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை, பேரூராட்சிகள் துறை, வனத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்க உள்ளார்.
மேலும் கூட்டுறவுத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, வருவாய் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனைதொடர்ந்து, மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக தற்போது இயங்கி வரும் பேருந்துகளுக்குப் பதிலாக 20 புதிய நகர பேருந்துகளை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க: “நாட்டார் தெய்வங்கள்” காலத்தால் மறைக்கப்பட முடியாத இறை வழிபாடு.. புத்தகம் வெளியிட்ட முதலமைச்சர்! - MK STALIN RELEASE BOOK ON DEITIES