சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71வது பிறந்தநாள் (மார்ச் 1) இன்று. அவரது பிறந்தநாளை திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் எனப் பலரும் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, அவரது பிறந்தநாளான இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 8 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
-
எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்லும் 'சமூகநீதி நாயகர்' மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!#HBDCMMKStalin pic.twitter.com/QkRbtNw1eY
— DMK (@arivalayam) March 1, 2024
அதனைத் தொடர்ந்து, காலை 8.30 மணி அளவில் சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளார்.
பின்னர் சி.ஐ.டி காலனி இல்லம் சென்று கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார். அதைத் தொடர்ந்து திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு முதலமைச்சர் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெறும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அறிவாலயத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.