சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் மொழித்தாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்மொழி பாடத்தேர்வை எழுதுவதற்கு சிறுபான்மை மொழியில் பயிலும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 4000 பேர் சிறுபான்மை மொழியில் மொழிபாடத் தேர்வை இன்று (செவ்வாய்க்கிழமை) எழுதுகின்றனர்.
மேலும் நடப்பாண்டில் சிறுபான்மை மொழி பாடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத்தேர்வு எழுதுவதில் இருந்து 2023-24 ஆம் ஆண்டிற்கு விலக்களித்து கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சிறுபான்மை மொழியில் படிக்கும் மாணவர்களில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத விலக்கு கேட்ட மாணவர்களின் விபரத்தை அரசு தேர்வு துறை பெற்றது.
அதன் அடிப்படையில், சுமார் 4000 மாணவர்கள் இன்று நடைபெறும் தமிழ் மொழி பாடத்தேர்விற்கு மாற்றாக கன்னடம், மலையாளம், உருது, தெலுங்கு ஆகிய தங்களின் சிறுபான்மை மொழியில் மொழித்தாள் பாடத்தை எழுதுகின்றனர். எனவே, இவர்கள் விருப்பம் மொழி பாடத்தை எழுத விண்ணப்பம் செய்யவில்லை.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12,616 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 4,57,525 மாணவர்களும், 4,52,498 மாணவிகளும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தனித்தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறையில் இருந்து படித்த சிறைவாசிகள் 235 பேரும் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 810 பள்ளிகளில் படித்த 66 ஆயிரத்து 771 மாணவர்கள் 288 மையங்களில் தேர்வை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த 621 மாணவிகளும் சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த 66 மாணவர்கள் என 687 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தேர்வு குறித்த விதிமுறைகள், ஆசிரியர்களால் எடுத்துக் கூறப்பட்டன. இதைத்தொடர்ந்து அவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் முன்னிலையில் கேள்வித்தாள்கள் பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. காலை 10.00 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டன. மாணவர்கள் கேள்வித்தாளை படித்து புரிந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து காலை 10.10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டு அதில் உள்ள தகவல்கள் சரிபார்க்கப்பட்டு கையொப்பம் பெறப்பட்டன. காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வு எழுத தேவையான அனைத்து வசதிகளும் அரசு தேர்வு துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், 4000 மாணவர்கள் தமிழ் அல்லாத சிறுபான்மை மொழியில் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்..! - 10th Public Exam In TN