சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வலைப்பேச்சு பிஸ்மி மீது பாஜக மாநில ஊடகப்பிரிவு துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “வலைப்பேச்சு பிஸ்மி என்பவர் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மார்பிங் செய்து, பிரதமரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், மனதை புண்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த பாஜக மாநில ஊடகப்பிரிவு துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ளும் புகைப்படத்தை மார்பிங் செய்து வலைப்பேச்சு பிஸ்மி என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இவரை போல் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்பிங் செய்தும், கேவலமான விமர்சனங்களை ஒரு கூட்டமே செய்து வருகிறது. இதுபோன்ற செயல்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மனதையும், இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் மனதையும் புண்படுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடியை புண்படுத்துவது மற்றும் அசிங்கப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் 60க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தும் ஏன் இதுவரை காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? திமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட இயலவில்லை.
திமுகவைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ண மூர்த்தி சரத்குமார் உள்ளிட்ட பலரை அவதூறாகவும், கேவலமாகவும் பேசினார். ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் காவல்துறையால் அவர் மீது எடுக்க முடியவில்லை. பாஜகவினர் பேசினால் உடனே நள்ளிரவிலேயே கைது நடவடிக்கை பாய்கிறது. ஆனால், மோடியைப் பற்றி பேசினால் இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?
விஷச் செடியை கிள்ளி எறிய வேண்டும் என்பதை எங்களது கோரிக்கையாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். எங்கள் புகாருக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மேலிடத்தில் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம் என பாஜக நிர்வாகி கார்த்திக் கோபிநாத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் ரத்து.. காரணம் இது தானா?