சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வருகின்ற 12ஆம் தேதி 2024 நடப்பாண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரை, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவையில் காலை 10 மணிக்கு கூட்ட உள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினம் உரை நிகழ்த்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 19ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்யவுள்ளார்.
மேலும் பிப்ரவரி 20ஆம் தேதி 2024-2025ஆம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கையினையும், பிப்ரவரி 21ஆம் தேதி 2023-2024ஆம் ஆண்டிற்கான முன்பணச் செலவின மானியக் கோரிக்கையினையும் தாக்கல் செய்யவுள்ளார். கடந்த ஆண்டு முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரில் சபாநாயகராலோ அல்லது அரசினாலோ எந்த வித சர்ச்சையும் ஏற்படவில்லை. அதனால், இந்த ஆண்டு ஆண்டின் முதல் கூட்டம் நன்றாகத்தான் இருக்கும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிர்கட்சித் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து முடிவெடுக்க வேண்டியது சபாநாயகர்தான். ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் எங்கு அமர வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. எதிர்கட்சியினர் நீதிமன்றம் சென்றிருப்பது அது அவர்களுடைய விருப்பம். இதில் நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம். ஆனால் சபாநாயகரின் உரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது” என கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வது தொடர்பாக முதன் முதலில் குரல் கொடுத்தவர் மறைந்த எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த். அதற்காக அவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். ஆனால் அப்போது ஆளும் கட்சியாக இருந்தது அதிமுக. விஜயகாந்த் தொடர்ந்த வழக்கிற்கு எதிர் மனுவாக அதிமுக சட்டபேரவை நிகழ்வுகளை நேரலையில் காண்பிக்க முடியாது என மனுத் தாக்கல் செய்துள்ளது.
ஆனாலும் கூட தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டபேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் கான்பிக்க வேண்டும் என பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதில் முதற்கட்டமாக, கேள்வி-பதில் நேரங்கள் மற்றும் அரசின் முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் தொடர்ந்து நேரலையில் காண்பிக்கிறோம். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு நம்முடைய மாநிலத்தில் சட்டமன்றத்தில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை நேரலையில் காண்பிக்கிறோம்.
மேலும், இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற நிகழ்வுகளையும் மக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், வீடியோ பதிவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான பணியினை செய்து வருகிறோம். குறிப்பாக, இதற்கு முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் மற்றும் விவாதங்களும் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: Budget 2024 Highlights: வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.. பெண்களுக்கு தடுப்பூசி உள்ளிட்ட பட்ஜெட் முக்கிய தகவல்கள்!