சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "லோக்சபா தேர்தலில் கருத்துக்கணிப்புகளையும் தாண்டி, மக்கள் கணிப்பில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்.
அதேபோல், தமிழகத்தில் பாஜக கூட்டணி சார்பில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல தொகுதியில் வெற்றி பெறுவதற்கான நல்ல வாய்பை மக்கள் ஏற்படுத்தி உள்ளனர். தமிழக தேர்தலில், பாஜக கூட்டணியின் தேர்தல் பணிக்கு மக்கள் நல்ல அங்கீகாரம் வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்று நல்லரசாக உள்ள இந்தியாவை வல்லரசாக மாற்றுவார். பதவிகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் நலன் கருதி, வளம் கருதி, பாஜக கூட்டணியில் தமாகா தொடர்ந்து நீடிக்கும். ஒரு கட்சியின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் இடத்தில் மக்கள் தான் உள்ளனர். அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவதில் தவறில்லை.
தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக என மூன்று கட்சிகள் உள்ளன. அவர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை. தேர்தலுக்கு தேர்தல் வாக்கு வங்கி, சதவீதம் என எல்லா கட்சிகளுக்கும் மாறும். திமுகவும் ஒரு காலத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக சட்டசபையில் இருந்தது.
பாஜகவும் கூட ஒரு காலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் நாடாளுமன்றத்தில் இருந்தனர். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது.
மக்கள் மீது சுமையை சுமத்தியுள்ளதை யாராலும் மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது. வரும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் அதிக கட்சிகளுடன் நல்ல கூட்டணி அமையும். மீண்டும் காமராஜர் சுவடுகள் இருக்கின்ற ஆட்சிக்கு பாஜக துணை நிற்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் 2024; தென்காசியில் வெற்றியை தக்க வைக்குமா திமுக அல்லது தட்டிப்பறிக்குமா அதிமுக? - Lok Sabha Election Result 2024