பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர் அல்சூரு ஏரிக்கரையில் உள்ள யாதவா சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) தமிழ் ஆர்வலர் எஸ்.டி.குமார் தலைமையில் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் ஒற்றுமைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுகவில் கர்நாடக மாநிலச் செயலாளராக இருந்த எஸ்.டி.குமார், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, கர்நாடக மாநில தமிழர்கள் ஒற்றுமைக்காக புதிய அமைப்பை ஏற்படுத்த உள்ளார். இதனையடுத்து, இன்று பெங்களூருவில் பல தமிழக அமைப்புகள் ஒன்றிணைந்து எஸ்.டி.குமார் தலைமையில் ஆலோசனை நடத்தினர்.
இதில், "தமிழ் அறக்கட்டளை, பி.இ.எம்.எல்.தமிழ் மன்றம், நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு, தேசிய மனித உரிமை அமைப்பு, எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் ரசிகர் அமைப்பு, லைனஸ் குரூப் ஆப் கர்நாடகா, ஐ.டி.ஐ தமிழ் மன்றம் உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் வாழ்த்து பாடல், கன்னட வாழ்த்து பாடப்பட்டது. பின்னர், நம்மூர் தமிழ் மக்கள் குழுவின் சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆலோசனை கூறிய தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் சிவகுமார் பேசும் போது, "தமிழர்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளனர்.
திருவள்ளுவர், பாரதியார் பெயரில் கூட்டுறவு வங்கிகளை தொடங்க வேண்டும். அறக்கட்டளை தொடங்க வேண்டும். உயர்கல்வியில் தமிழர்கள் முன்னேற வேண்டும்" என்று எடுத்துரைத்தார். மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அனைத்து தமிழர்களும் கர்நாடக தமிழர்கள் வாழ்வியல் மேம்பட பல கருத்துக்களை முன் வைத்தனர்.
இதனையடுத்து, இறுதியாக சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ஒருங்கிணைந்து இருப்பது போல் கர்நாடக தமிழர்கள் ஒன்றிணையும் வகையில் விரைவில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் லட்சக்கான தமிழர்களை ஒன்றிணைத்து மாநாடு நடத்தப்படும் என்று எஸ்.டி.குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “பெண்களைப் பற்றி யார் பேசினாலும் தவறு.. ஆனால் சவுக்கு சங்கர்?” - தமிழிசை கூறியது என்ன? - Tamilisai Soundrarajan