சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலமங்கலம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில், பணியில் இருந்த மணிமங்கலம் தலைமைக் காவலர் சங்கர், காவலர்கள் கணேஷ் சிங், ஆனந்தராஜ் உள்ளிட்ட மூவரும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், சட்ட விரோதமாக மது விற்று வந்துள்ளதை கண்டுபிடித்து, அவரிடமிருந்து 7 வெளிநாடு மது பாட்டில்கள், ரூ.1,900 பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூபாய் 50 ஆயிரம் பணம் கொடு என கட்டாயப்படுத்தி மூவரும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெருமாள் பணம் தர மறுக்கவே மூன்று காவலர்களும் சேர்ந்து அவரை சரமாரியாகத் தாக்கியதாக தகவல் தெரியவந்துள்ளது. இதில் காயமடைந்த பெருமாள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் மணிமங்கலம் காவல்துறையினருக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மணிமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மூன்று காவலர்களும் பணம் கேட்டு மிரட்டி பெருமாளை தாக்கியதை உறுதிசெய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் மூன்று காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.