விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 64 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் 24-ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 29 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 35 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்புமனுவைத் திரும்பப் பெற இன்று மாலை 3 மணியுடன் அவகாசம் நிறைவடைந்தது. 29 பேரில் யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறாததால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் களம் காண்பது உறுதியானது. இதனையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள், வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் முக்கிய வேட்பாளர்களான திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு உதயசூரியன், பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 'மாம்பழம்', நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்.. பொதுமக்கள், வீரர்களுக்கான பயன் என்ன? சிறப்பு தொகுப்பு!
பானைக்கு 4 பேர் போட்டி: மேலும், பானை சின்னத்தை நான்கு வேட்பாளர்கள் கேட்டதால், தேர்தல் ஆணைய விதிப்படி குலுக்கல் நடைபெற்றது. இதில் சுயேச்சை வேட்பாளர் சிவசக்தி என்பவருக்கு 'பானை' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேபோல், தேர்தல் மன்னன் பத்மராஜனுக்கு டயர்கள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆட்டோ ரிக்ஷா, தீப்பெட்டி, பிரஷர் குக்கர், டயர், வளையல், தர்பூசணி உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பாமக கடிதம்: கடந்த மக்களவைத் தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்ட பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதோடு 8 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகள் பெற்றதால், மாநிலக் கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்தது. இதனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிபிஐ அதிகாரி போல் பேசி அரசு மருத்துவரிடம் ரூ.36 லட்சம் மோசடி.. சேலத்தில் பரபரப்பு!