திருநெல்வேலி: பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்பட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இதில் சிறுத்தை கரடி போற்ற விலங்குகள் மலையடிவாரம் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் வலம் வருவதும், அவ்வபோது மனிதர்கள் கால்நடைகளை தாக்குவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாபநாசம் அருகே வேம்பையாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் ஆட்டை கடத்த வாரம் சிறுத்தை ஒன்று தாக்கியது. அதைத் தொடர்ந்து அனவன் குடியிருப்பு என்ற கிராமத்தில் உள்ள மற்றொரு விவசாயி ஆட்டையும் சிறுத்தை தாக்கியது.
இதனையடுத்து ஊருக்குள் திரியும் சிறுத்தையை பிடிக்க நெல்லை வனத்துறையினர் இரண்டு கிராமங்களிலும் கூண்டு வைத்தனர். முதலில் கடந்த 17ம் தேதி வேம்பையாபுரத்தில் கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கிய நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே வேம்பையாபுரத்தில் மற்றொரு சிறுத்தை சிக்கியது.
தொடர்ந்து அதே நாளில் அனவன் குடியிருப்பு கிராமத்தில் வைக்கப்பட்ட மற்றொரு கூண்டில் மூன்றாவது சிறுத்தை பிடிபட்டது. ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து இரண்டு சிறுத்தை பிடிபட்டது. இதனையடுத்து முதலில் பிடிக்கப்பட்ட சிறுத்தை அப்பர் கோதையாறு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
அந்த வீடியோ நெல்லை வனத்துறையினர் வெளியிட்டனர். இரண்டாவதாக ஒரே நாளில் பிடிபட்ட இரண்டு சிறுத்தைகள் களக்காடு முண்டந்துறை பகுதியில் அடர்ந்த வனத்துக்குள் விடப்படுவதாக வனத்துறை என தெரிவித்திருந்தனர். ஆனால் அது தொடர்பான வீடியோ வெளியாகவில்லை.
இந்நிலையில் இரண்டாவது பிடிபட்ட சிறுத்தைகள் காட்டுக்குள் விடப்படும் வீடியோ காட்சியை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "சுதந்திரத்திற்கான நான்கு கால் பாய்ச்சல் என குறிப்பிட்டு, மனிதர்கள் வனவிலங்குகள் மோதல் பகுதியில் வனவிலங்குகளை பாதுகாப்பான முறையில் பராமரித்தல் மற்றும் இடமாற்றம் செய்வது என்பது பெரும் சவாலான விஷயம்.
இது மிக முக்கியமான உத்திகளில் ஒன்றாகும் நெல்லை வனக்கோட்டத்தில் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்திய சிறுத்தைகளைப் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர் சிறுத்தைகளை வெற்றிகரமாக மீட்டு விடுவித்த வன ஊழியர்களுக்கும் ஆதரவு அளித்த உள்ளூர் கிராம மக்களுக்கும் பாராட்டுக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கார் ஓனர்களுக்கு ஷாக்.. வாடகை கார்களை அடமானம் வைத்து மோசடி.. நெல்லையில் அதிர்ச்சி!