நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரும் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு வழக்குகள்..! - Sumoto Case
Justice Anand Venkatesh: அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு ஆகியோருக்கு எதிரான சூமோட்டோ வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
Published : Feb 7, 2024, 11:06 PM IST
|Updated : Feb 8, 2024, 3:46 PM IST
சென்னை: 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையிலான திமுக ஆட்சி காலகட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது 2011ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைப்போல 2006ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையிலான ஆட்சிக்காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்குகளை ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்த நிலையில், இந்த இரு வழக்குகளிலிருந்தும் அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை தீர்ப்புகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கிரிமினல் ரிவிசன் பெட்டிசன் என்ற அடிப்படையில் தனித்தனி வழக்குகளாக விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில், வழக்குகளை விசாரிக்கத் தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குகளை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (பிப் 07) இந்த வழக்குகள் விசாரணைக்குப் பட்டியலிடும்படி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று பட்டியலிடப்படவில்லை. இந்த சூழலில், தலைமை நீதிபதியின் பரிசீலனைக்குப் பிறகு அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகள் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நாளை (பிப் 08) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த சொத்துக்குவிப்பு வழக்குகளும் நாளை (பிப் 08) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் ஓட்டை; சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!