சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு விமான முனையம், சர்வதேச முனையம் என சுவர்களின் பதித்துள்ள கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள், மேற்கூரைகள் உள்ளிட்டவை மாறி மாறி விழுவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால், நல்வாய்ப்பாக இந்த விபத்துகளில், யாருக்கும் பெரிய அளவில் காயங்களோ அல்லது உயிர் சேதங்கள் ஏற்படாமல், ஒரு சிலர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சுமார் 90 முறைகள் நடந்த இந்த தொடர் விபத்துகளை அடுத்து, சென்னை விமான நிலையம் என்றாலே கண்ணாடி, மேற்கூரைகள் உடைந்து விழும் விமான நிலையம்தானே என்று கேட்கும் அளவிற்கு கேலிக்கூத்தாக இருந்தது. இத்தகைய சூழலில், அடுத்த சில ஆண்டுகள் சென்னை விமான நிலையத்தில் எந்தவொரு விபத்தும் ஏற்படவில்லை.
ஆனால் இதற்கிடையே, கடந்த ஆண்டு ஒரு முறை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரிய கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது என்ற செய்தி, மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு, இந்த ஓராண்டாக கண்ணாடி எதுவும் உடைந்து விழாமல் விமான நிலையம் இயல்பு நிலையில் இருந்தது.
இத்தகைய நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சர்வதேச விமானத்தில் வந்து, உள்நாட்டு விமானத்தில் பயணிக்க வேண்டிய டிரான்சிட் பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் பயன்படுத்தும் 4வது நுழைவாயிலில் உள்ள 7 அடி உயரம், 3 அடி அகலம் உடைய கண்ணாடி கதவு இன்று (அக்.19) காலையில் திடீரென உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மலேசியா டூ சென்னை.. விமானத்தில் வந்த அரிய வகை பச்சோந்தி, கருங்குரங்குகள்.. சிக்கியது எப்படி?
இதனால் டிரான்சிட் பயணிகள் அந்த வழியில் செல்வதற்கு பயந்து, வெளியே நின்று கொண்டு, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து, அந்த கேட் வழியாக யாரும் செல்லாதபடி, கேட்டை டேப் போட்டு மூடி வைத்தனர். அதோடு பயணிகள் அனைவரையும் மாற்று வழியில், உள்நாட்டு விமான முனையத்திற்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.
இதற்கிடையே, பயணிகள் யாராவது தங்களுடைய உடைமைகளை எடுத்துச் சென்ற ட்ராலியை, கண்ணாடி கதவு மீது மோதி கண்ணாடி உடைந்ததா? அல்லது தானாக உடைந்து விட்டதா? என்று இந்த கண்ணாடி கதவு எப்படி உடைந்தது? என்பது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், உடைந்த கண்ணாடி கதவை அகற்றிவிட்டு, வேறு கண்ணாடி கதவு பொருத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்