சென்னை: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னை விமான நிலையம் வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என நம்புகிறேன். ஆனால், கடந்த முறையை விட தற்போது 25 இடங்கள் குறைந்து, 275 இடங்களில் வெற்றி பெறும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறலாம். மற்ற வேட்பாளரைப் பற்றி எனக்குத் தெரியாது.
பாஜக வெற்றி பெற்றால் யார் பிரதமர் ஆவது என்பது குறித்து இதுவரை முறையாக எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. கட்சிக்குள் தேர்தல் நடத்தியும் முடிவெடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற பின்பு தான் யார் பிரதமர் என முடிவெடுக்க முடியும். கடந்த பாஜக ஆட்சியில், பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் வரவில்லை. பிரதமர் மோடி பொருளாதார ஞானம் இருக்கும் யாரையும் சந்தித்துப் பேசவில்லை, எல்லாம் எனக்குத் தெரியும் என்ற பெருமையில் இருந்தார்.
அதேபோல், சீன நாட்டு ராணுவம் நமது நாட்டில் 4 ஆயிரம் சதுர அடி ஆக்கிரமிப்பு செய்துள்ளது. உலக நாடுகளில் பெரிய நாடுகள் எதுவும் நமக்கு தற்போது உதவியாக இல்லை. என்னைப் பொறுத்தவரை, மோடிக்கு 2 முறை வாய்ப்பு கிடைத்துவிட்டது. மூன்றாவது முறை வேறு யாராவது பிரதமராக வர வேண்டும். தேர்தலுக்கு முன்பு ரயிலில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட பணம் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என உறுதி செய்யப்பட்டால் தமிழ்நாடு பாஜக தலைமையில் மாற்றம் வர வேண்டும், இது எனது கருத்து.
இந்தியாவில் எந்த தொகுதியிலிருந்து யார் வந்தாலும் சாதி மதங்களை மறந்து, அனைவரும் இந்துக்கள் என ஒன்றாக இருக்க வேண்டும். அதேபோல், இந்தியா தனது சொந்தக் காலில் நின்று சீனாவைத் தோற்கடிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சிகளில் எந்த தலையீடும் இருக்கக்கூடாது.
ராகுல் காந்தியைப் பொறுத்தவரை ஒரு மக்கு, கல்லூரியைக் கூட ஒழுங்காக முடிக்கவில்லை. இந்தியாவில் எதிர்கட்சித் தலைவராக இருக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மட்டுமே தகுதி உள்ளது. அவருக்கு தைரியம், படிப்பு, அனுபவம் அனைத்தும் உள்ளது. நான் இரண்டு முறை எம்பி ஆக இருந்தேன். கடந்த முறை நான் நிதியமைச்சர் ஆக வரப்போகிறேன் என எல்லோரும் கூறினார்கள். ஆனால் வரவில்லை. மோடியின் கீழ் நிதியமைச்சராக இருப்பது பெரிய கஷ்டம், நிர்மலா சீதாராமன் போன்ற கைக்கூலி இருந்தால் சரியாக இருக்கும். மோடி கூறுகிற இடத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பார்.
தேர்தல் பிரச்சாரங்களில் மோடி என்ன பேசுகிறார் என எனக்கே புரியவில்லை. மக்களுக்கு எப்படிப் புரியும் தமிழ்நாட்டு மக்களுக்குத் தண்ணீர் வேண்டுமென்றால் கடல் நீரை எடுத்து உப்பை நீக்கி அதை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தலாம். ஆனால், திமுக காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.