சென்னை: ஐசிஎப்பின் புதிய பொதுமேலாளராக சுப்பா ராவ் (56) இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 1987ஆம் ஆண்டின் இந்திய ரயில்வே இயந்திரப் பொறியியல் சேவைப் பிரிவைச் சேர்ந்த சுப்பா ராவ், ஐசிஎப்பின் முந்தைய பொதுமேலாளரான பி.ஜி.மால்யா பணி ஓய்வு பெற்றதையடுத்து, அவரிடமிருந்து பொறுப்பைப் பெற்றுக் கொண்டார்.
சுப்பா ராவ், இயந்திரப் பொறியியல் இளங்கலைப் பட்டமும் (BE Mechanical Engg), பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM, Bangalore) பொது நிதி மற்றும் மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். ஐசிஎப் பொதுமேலாளராகப் பொறுப்பேற்கும் முன், இவர் தென்மேற்கு ரயில்வேயின் கூடுதல் பொதுமேலாளராகவும், இதர ரயில்வேக்களில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
தென்மேற்கு ரயில்வேயின் முதன்மை இயந்திரப் பொறியாளராகவும், தென்மத்திய ரயில்வேயின் தலைமை திட்டப் பொறியாளராகவும், தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மேலாளராகவும், தென்மேற்கு ரயில்வே மைசூரில் உள்ள ரயில் பெட்டி பராமரிப்புத் தொழிற்சாலையின் தலைமை தொழிற்கூட மேலாளராகவும், பெங்களூரில் உள்ள ரயில் சக்கரத் தொழிற்சாலையின் தலைமை தொழிற்கூட மேலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
பாரிஸ் மற்றும் ஜோஹன்னஸ்பர்க்கில் முதுநிலை மேலாளர்களுக்கான பயிற்சியில் பங்கு கொண்டதுடன், அமெரிக்காவில் TTCI நிறுவனத்தில் மின்தொடர் வண்டிச் சக்கர (EMU Cast Wheels) வடிவமைப்புக்கான சான்றிதழும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளை மறுநாள் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை.. கிளாம்பாக்கம் விவகாரத்தில் தமிழக அரசு வாதம்!