திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மூன்று பேர் கடந்த வாரம் பள்ளிக்கு கத்தி கொண்டு வந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றதுடன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
மேலும், பள்ளி தலைமை ஆசிரியரை குத்துவதற்காக தான் மாணவர்கள் கத்தி கொண்டு வந்த்தாக தகவல்கள் வெளியாகின. இரண்டு தினங்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்கள் வெளியே வந்த நிலையில், மூன்று மாணவர்களை பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த மாணவர்கள் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி மீண்டும் தங்களை பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மாணவர்கள் கூறுகையில், "எங்கள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டோம். எங்கள் பையில் இருந்து கத்தி, கத்திரிக்கோல் என எந்த ஆயுதமும் போலீசார் கைப்பற்றவில்லை. ஆசிரியர் ஒருவர் தான் கத்தியை எடுத்து எங்கள் பையில் வைத்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், எங்கள் பையில் ஆயுதங்கள் எதுவும் இல்லை என போலீசாரிடம் சொல்ல முயற்சித்த போது, போலீசார் எங்களை பேச விடவில்லை. பள்ளியில் வரலாற்று ஆசிரியருக்கும், தலைமை ஆசிரியருக்கும் உள்ள பிரச்னையை எங்கள் மீது திணித்து பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக" பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவரின் பெற்றோர் கூறுகையில், "எங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். வேனும்னு பண்ணி பிள்ளைகளை படிக்க விடாமல் செய்கிறார்கள். எங்களது பிள்ளைகளுக்கு படிப்பு தேவை. நல்ல வழியை காண்பிப்பவர்களே இப்படி இருந்தால் எங்களது பிள்ளைகள் எப்படி முன்னேறும்? ஆசிரியர்களே மாணவர்கள் மீது பொய் வழக்கு போட்டால் பிள்ளைகள் என்ன செய்வார்கள்? ஆசிரியர்களுக்கு பிள்ளைகளை பிடிக்கவில்லை என்றால் பொய் வழக்கு கொடுப்பதா? இந்த நிலைமைக்கு காரணம் ஆசிரியர் தான்" என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரசுத் தரப்பு விளக்கத்தை அறிந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துச்சாமிடம் கேட்டபோது, "காவல்துறை தான் இந்த சம்பவத்தை விசாரித்தார்கள். எனவே, அவர்களிடம் கேளுங்கள். ஆசிரியர்கள் எப்படி திட்டமிட்டு கத்தியை வைப்பார்கள்? சும்மா ஏதாவது பேசுவார்கள்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா இறுதி ஒத்திகை! - Independence Day Parade Rehearsal