வேலூர்: வேலூர் மாவட்டம், தொரப்பாடி எழில்நகரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் வேலூர் சாய்நாதபுரம் கலைவாணர் நகரைச் சேர்ந்த செல்வி (41) என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு தட்டச்சராக பணியில் சேர்ந்துள்ளார். சுமார் 6 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அவர் காசாளர் (Cashier) பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களின் பெற்றோர் செலுத்தும் கல்விக் கட்டணத்தை செல்வி பெற்றுக் கொண்டு, அதற்கான ரசீது வழங்கி, மறுநாள் அந்த பணத்தை சென்னையில் உள்ள பள்ளியின் அலுவலக வங்கிக் கணக்கில் வரவு வைப்பது வழக்கம். இந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை மாணவர்களின் கல்விக் கட்டண ரசீது மற்றும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்துள்ளது.
இதையடுத்து, சென்னையில் உள்ள பள்ளி நிர்வாகத்தின் தணிக்கை குழுவினர், வேலூரில் உள்ள பள்ளியில் மாணவர்கள் செலுத்திய கல்விக் கட்டண ரசீது, வங்கியின் வரவு உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ததில், காசாளர் செல்வி, மாணவர்களின் கல்விக் கட்டணம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 127 ரூபாய்க்கு ரசீது வழங்கி விட்டு, அதனை பள்ளியின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தணிக்கை குழுவினர் செல்வியிடம் விசாரணை நடத்தி, கையாடல் செய்த பணத்தை விரைவாக செலுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த நிலையில், பள்ளியின் முதல்வர் இச்சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணனிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறைக்கு, எஸ்.பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், பள்ளியில் காசாளராக பணிபுரிந்த செல்வி, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தனது வங்கிக்கணக்கு எண்ணைக் கொடுத்து அதன் மூலமும், பள்ளியில் செலுத்திய பணத்தை வங்கிக்கணக்கில் வரவு வைக்காமலும், 26 லட்சத்து 90 ஆயிரத்து 127 ரூபாய் பணத்தை கையாடல் செய்து, அந்த பணத்தில் சுற்றுலா சென்றதும், வாங்கிய கடனை அடைத்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து செல்வியை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 'வீடியோ போடாதீங்க ப்ளீஸ்'.. ஆபாச ஆங்கரால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. யூடியூபர்ஸ் கைது..! - Veera Talks Anchor