கோயம்புத்தூர்: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் (NEET) இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவையைப் பொருத்தவரை 371 அரசுப் பள்ளி மாணவ - மாணவிகள் உட்பட 6 ஆயிரத்து 967 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுகின்றனர்.
மேலும், பீளமேடு நேஷனல் மாடல் பள்ளி, புளியகுளம் ரோடு வித்யா நிகேதன் பள்ளி, புரூக் பீல்ட்ஸ் சிக்னல் கிக்கானிக் விந்தியா மந்திர், சரவணம்பட்டி விவேகம் பள்ளி, காளப்பட்டி ரோடு சுகுணா பிப் பள்ளி மற்றும் கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி தொழில் நுட்பக் கல்லூரி, சூலூர் ரத்தினவேல் சுப்பிரமணியம் கல்லூரி, எஸ்.எஸ் குளம் ஆதித்யா கல்லூரி உள்ளிட்ட பள்ளி, கல்லூரிகள் தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, தேர்வு எழுதுபவர்கள் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களைத் தேர்வு மையத்திற்கு எடுத்து வரக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படியே சோதனை மேற்கொண்டு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது நீட் தேர்வு!
இந்நிலையில், புரூக் பீல்ட்ஸ் சிக்னல் பகுதியில் கிக்கானிக் பள்ளி மையத்திற்குத் தாமதமாக வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்காததால் வருத்தத்துடன் திரும்பிச் சென்றார். அதே போல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமிர்தா என்ற மாணவி கோவை பீளமேடு பகுதியில் உள்ள நேஷனல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்திற்குத் தாமதமாக வந்துள்ளார்.
இதனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர், மாணவியைத் தேர்வு எழுத அனுமதிக்குமாறு பெற்றவர்கள் வலியுறுத்தினர். இதனால், பெற்றோர்களும் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. இருப்பினும் தாமதமாக வந்த மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது குறித்து மாணவியின் தந்தை கூறுகையில், ஒரே பேரில் இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாங்கள் சென்ற மையம் தவறானது எனக் கடைசி நிமிடத்தில் தான் தெரிவித்தனர். அதனால் தான் தேர்வு மையம் செல்ல மிகவும் தாமதமானது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறில் நீட் தேர்வைத் தவறவிட்ட மாணவி.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?