சென்னை: சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பால்வாடி இரண்டாவது தெருவில் வீரமுத்து- செல்வி தம்பதியனர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் கேசவன் (10) அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கூலி வேலை செய்யும் வீரமுத்து அவரது மனைவியும் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டனர்.
அப்போது வீட்டில் இருந்த சிறுவன் குப்பையை போட்டுவிட்டு வருவதற்காக தெருவில் இருந்த குப்பை தொட்டிக்கு நடந்து சென்றுள்ளார். சிறுவன் குப்பையை போடும்போது அதை அவரிடம் இருந்து கவ்வி பறிக்க நினைத்த தெரு நாய் ஒன்று, சிறுவனின் கையை கடித்து குதறியது.
இதில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட அவர் வீட்டுக்கு ஓடியுள்ளார். சிறுவனை கண்ட வீட்டின் உரிமையாளர் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனுக்கு கையில் தையல் போட முடியாத அளவுக்கு பெரும் காயம் ஏற்பட்டுள்ளதால், தொடையிலிருந்து சதையை எடுத்து பொருத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 2 வயது குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்.. சென்னையில் தொடரும் நாய் கடி சம்பவங்கள்!
இதனால் கூலி வேலை செய்யும் அவரது பெற்றோர் செய்வதறியாது தவிர்த்து வருகின்றனர். வேலைக்கு செல்ல முடியாமல் மகனுக்கு மருத்துவ செலவும் செய்ய முடியாமல் தவிக்கும் அவர்களுக்கு மாநகராட்சி தரப்பில் இருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேசமயம் தங்கள் பகுதியில் உள்ள தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும் என நெற்குன்றம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் சிறுவர்களையும், குழந்தைகளையும் நாய்கள் கடிக்கும் சம்பவம் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ள நிலையில், தற்போது சிறுவன் ஒருவனின் கையை தெரு நாய் குதறிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.