சென்னை: சென்னை தாம்பரம் மாநகராட்சி பகுதியில், தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவைகள் அவ்வப்போது பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோரை ஓட ஓட விரட்டி கடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று (பிப்.13) இரவு தாம்பரம் மாநகராட்சியின் 63-வது வார்டு கிழக்கு தாம்பரம் செந்தமிழ் சேதுப்பிள்ளை தெருவில், பாத்திமா என்ற பெண் தனது 7 வயது மகன் முகமது ஃபாரூக்குடன் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அந்த தெருவில் சுற்றி அலைந்து கொண்டிருந்த 2 தெரு நாய்கள், ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு, சாலையில் சென்று கொண்டிருந்த தாய், மகன் முன்பு வந்து விழுந்துள்ளது.
அதைப் பார்த்து, சிறுவன் முகமது ஃபாரூக் பயந்து அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளார். இதையடுத்து, அந்த நாய்கள் வெறி பிடித்தது போல் ஊளை விட்டுக் கொண்டு, சிறுவனை ஓட ஓட விரட்டி கால்களில் கடித்துள்ளன. இதைப் பார்த்த தாய் பாத்திமா கத்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கற்களால் நாய்களை அடித்து சிறுவனை மீட்டுள்ளனர்.
அதோடு காயம் அடைந்த சிறுவன் முகமது ஃபாரூக்கை, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, முதல் சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பின்னர், சிறுவனுக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் சேலையூர் காவல் நிலையம், தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் வாய்மொழியாகப் புகார்களைத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுத்து, தெருக்களில் வெறி பிடித்து சுற்றி அலையும் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்களை முழுமையாகப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், சிறுவனை ஓட ஓட வெறித்தனமாக நாய்கள் துரத்திக் கடித்த சம்பவம், தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம்; டெல்லியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்!