சென்னை: பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, தமிழக பெண்கள் இயக்கத்தின் தலைவர் மற்றும் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, செயலாளர் வாசுகி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், தமிழகத்தில் உள்ள பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும் எனவும், பணி, கல்வி நிமித்தமாக நள்ளிரவு நேரங்களில் பேருந்து, ரயில் நிலையம் வரக்கூடிய பெண்களுக்கு தங்குவதற்கு பாதுகாப்புடன் கூடிய விடுதிகளை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி விளக்கமளித்தார்.
அதில், சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் மிகக் குறைந்த வாடகையில் பெண்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில் தோழி என்ற திட்டத்தின் கீழ் சென்னை, திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 இடங்களில் 24 மணி நேரமும் இயங்கும் பயோ மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் தங்குமிடங்கள் அரசுத் தரப்பில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பெண்கள் இந்த தங்குமிடங்களை www.tnwwhcl.in என்ற இணைய தளத்தில் சென்று தங்குவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், இக்கட்டான சூழலில் இருக்கும் பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் உடனடியாக 181 என்ற அரசின் அவசர அழைப்பு எண்ணுக்கு அழைத்தால் உரிய உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, மருத்துவமனையில் 4 நாட்கள் தங்கி சிகிச்சை அளிப்பதற்கும் மற்றும் மன நல ஆலோசனைகள் அளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, இந்த அவசர எண்ணுக்கு இதுவரை 9 லட்சம் அவசர அழைப்புகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு லட்சம் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உட்பட தமிழகத்தில் 43 மையங்கள் செயல்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பில், இந்த விவரங்கள் முறையாக விளம்பரப்படுத்தப்படவில்லை என்றும், பெண்களுக்கு இதுகுறித்து விவரங்கள் முழுமையாக தெரிவதில்லை என குறிப்பிட்டார். அதனை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையரை தாமாக முன் வந்து வழக்கில் இணைத்து உத்தரவிட்டதோடு, பெண்கள் பாதுகாப்பிற்காக அரசு செய்ததாக தெரிவித்த திட்டங்களை, பெண்கள் எளிதில் பயன்படுத்த முடிகிறதா என்பது குறித்து மனுதாரர் மருத்துவமனை, தங்குமிடங்களில் ஆய்வு செய்து தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரம்; இறுதி விசாரணைக்காக ஒத்திவைப்பு!