பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தேவையூர் தெற்கு கிராமம் ரஞ்சன்குடியை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை (47). கொத்தனார் வேலை செய்துவந்த இவர், கடந்த 9ஆம் தேதியன்று இரவு சுமார் 8 மணியளவில், தனது வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அடிபட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பிச்சைப்பிள்ளைக்கு சாந்தி (37) என்ற மனைவியும், 21 வயதில் மனவளர்ச்சி குன்றிய நிலையில் பிரகாஷ் என்ற மகனும், 12ஆம் வகுப்பு பயிலும் கவிதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது மனைவி சாந்தி சம்மதித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, உடல் உறுப்புகளை தானம் செய்யும் நபர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்த வேண்டும் என்ற அரசின் உத்தரவின்படி, "நேற்று (வெள்ளிக்கிழமை) ரஞ்சன்குடியில் சுப்பிரமணியர் கோயில் அருகே (காந்தி நகரில் இருந்து கூட்டுறவு வங்கி செல்லும் வழியில்) பிச்சைப்பிள்ளையின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சார் ஆட்சியர் கோகுல் கலந்துகொண்டு, பிச்சைப்பிள்ளையின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: 'ஸ்வீட்டு எனது சகோதரர் ஸ்டாலினுக்காக..' - மு.க.ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கிச் சென்ற ராகுல் காந்தி - Rahul Gandhi