சென்னை: சென்னை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சைய்யது குலாப் (22). இவர் நேற்றிரவு அருகில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து ஜன்னல் மேற்கூரை சைய்யது குலாப் தலையின் மீது விழுந்துள்ளது.
இந்த விபத்தில் குலாப் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சைய்யது குலாப் உயிரிழந்தார்.
குலாப்பிற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நிச்சயயிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'அதிமுகவுக்கு முடிவுரை எழுதுவார் ஈபிஎஸ்'... ஓபிஎஸ் - டிடிவி தனித்தனியே சூளுரை..!
பழைய குடியிருப்பு என்பதால் மேற்கூரை இடிந்து விழுந்து தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இளைஞரின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும், பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய மாற்று குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் சினிவாசப்புரம் மெயின் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சாலையில் மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்படைந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, இளைஞர் சைய்யது குலாப் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக அரசு அவரது குடும்பதுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு ஜன்னலின் சன்ஷேட் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சைய்யது குலாப்பின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில், பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு வாரியத்தால் புதிய குடியிருப்புகள் கட்டி குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் இடைப்பட்ட காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 கருணைத் தொகையாக வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.