சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், 2009 ஜூன் 1ஆம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது.
இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை இடைநிலை ஆசிரியர்கள் முன்வைத்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஊதிய பிரச்னை சரி செய்யப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கை 311-இல் தெரிவிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடத்தியபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2023 புத்தாண்டின் முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மனுக்கள் அளித்தும், எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!
மேலும், 11வது நாளாக ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள், இன்று தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். இந்நிலையில், அரசின் சார்பில் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஏற்ப சில நடவடிக்கைகளை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் அருகில் இருந்து பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்டங்களிலும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
இதையும் படிங்க: “காங்கிரஸ் கட்சி இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறது”.. விஜயதாரணி குற்றச்சாட்டு!