சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுடன் உணவு உண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியார்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து மக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்த ‘சமபந்தி உணவு’ நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மூன்றாவது ஆண்டாக மக்களுடன் அமர்ந்து உணவருந்தி இருக்கிறேன்.
நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெரிய அளவு கூட்டம் இருந்தது. ஆனால், யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்தனர். ஆம்னி பேருந்துகளுடைய புகார்கள் கடந்த ஆண்டைவிட தற்போது குறைந்துள்ளது. ஏதாவது ஆம்னி பேருந்துகள் பற்றிய பிரச்னை என்றால் உடனடியாக எங்களிடம் புகார் கொடுங்கள், நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் ஜெர்மன் வங்கியின் நிதி உதவியுடன் பேருந்து வாங்குகிறோம், நம் ஊருக்கு ஏற்றது போல் சில மாற்றங்கள் செய்து பேருந்துகள் வரவுள்ளது. தற்பொழுதும் பொதுமக்களிடம் இருந்து புதிய கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. அதையும் நாங்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளோம். தாழ்தளப் பேருந்து என்பது மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக நீதிமன்றம் வழங்கிய அறிவுரைப்படி வாங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறுகிய சாலைகளில் பேருந்துகளை இயக்க முடியாத இடங்களில் மினி பேருந்துகளை இயக்கக்கூடிய கட்டாயம் இருக்கிறது. எங்கு தேவை இருக்கிறதோ, அதை ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை தயாராக உள்ளது. மக்கள் நலனுக்காகவும், தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதற்காகவும் அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மினி பஸ் தொடர்பாக அடுத்த கட்டமாக முழுக்கொள்கை வெளியிடப்படும். எங்கெங்கு பேருந்து தேவை என்று மக்கள் சொல்கிறார்களோ, அங்கு பேருந்து இயக்குவதற்கு விண்ணப்பங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அதனைத் தொடர்ந்து, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை அளித்தற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், “போக்குவரத்து துறை அமைச்சர் நான் இருக்கிறேன், எங்களை வழி நடத்துபவரராக முதலமைச்சர் இருக்கிறார். எங்களுக்கு தெரியாமல் இது அன்புமணிக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி கிடையாது. போக்குவரத்து துறை மிகப்பெரிய நஷ்டத்தில் இருக்கிறது. கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தொழிலாளர்களேக் கூறி வருகிறார்கள். மேலும், தனியார் பேருந்து உரிமையாளர்களும் இந்த கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
நம் மக்கள் மீது அந்த சுமையை ஏற்றக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் இதுவரை பேருந்து கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கிறது” என்றார். மேலும், ஆளுநர் தேநீர் விருந்து தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், நடைமுறைக்கு ஏற்ப முதலமைச்சர் எடுக்கக்கூடிய முடிவு அது என பதிலளித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “எதற்காக சுதந்திரம் பெற்றோமோ அதை சிதைக்கிறது மோடி அரசு”