காஞ்சிபுரம்: நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இதில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் தொகுதி மக்களிடையே தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரம் மற்றும் கள நிலவரம் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு வேணுகோபால் சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரைச் செல்கின்ற இடம் எல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
குறிப்பாகப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வரவேண்டும் என்பதால் மக்கள் ஏகோபித்த வரவேற்பை எங்கள் கூட்டணிக்குத் தந்து கொண்டிருக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் எங்கள் கூட்டணியின் வெற்றி நிச்சயமாக உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாகப் பேசிய அவர், "ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் இதற்கு முன்பு இருந்த உறுப்பினர்கள் எந்த திட்டம் எல்லாம் கொண்டுவரவில்லையோ அதனை எல்லாம் நான் கொண்டு வருவேன் என கூறி மக்களிடத்தில் வாக்கு சேகரித்து வருகிறேன்.
அதிலும் குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூருக்கு அகல ரயில் பாதை திட்டம், தொழிற்பேட்டைகளை இணைக்கின்ற மெட்ரோ ரயில் திட்டம், நவோதயா பள்ளிகள், பன்னோக்கு மருத்துவமனை, கேந்திர வித்தியாலயா இரண்டு ஷிப்டாக கொண்டு வந்து மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயில்வதற்கான வசதி உள்ளிட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் என்ன கூறி மக்களிடத்தில் வாக்கு கேட்டு வருகிறேன்" என்று கூறினார்.
மேலும், "கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு வாக்கு கேட்க வந்த தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அதன் பிறகு தொகுதி மக்களுக்கு நன்றி கூறுவதற்குக் கூட வரவில்லை என்று அவர் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
ஆகவே, இந்த முறை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவிற்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தான் போட்டி. இதில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது ஜூன் 4ஆம் தேதி அது அனைவருக்கும் தெரியும்" என்று வேட்பாளர் வேணுகோபால் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்சி தொகுதியில் திருப்புமுனையை ஏற்படுத்தப்போவது யார்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு?