சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ராபரட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும் பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க, நாளை (மார்ச் 13) இலங்கை துணைத் தூதரகம் அழைத்துச் செல்லப்பட உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்தியர்கள் உட்பட இலங்கையைச் சேர்ந்த நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதில் இலங்கையர்களான சாந்தன், முருகன், ராபர்ட், ஜெயக்குமார் ஆகியோர் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தனர்.
இதையடுத்து, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 7 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இருப்பினும் இவர்கள் இன்றுவரை தாயகம் திரும்பவில்லை. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்களைத் தாய் நாட்டுக்கு அனுப்புவதில் சட்டச் சிக்கல் நிலவியதால், அவர்கள் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, இந்தச் சிறப்பு முகாம் சிறையைவிட மோசமாக இருப்பதாகவும், தங்களைத் தாயகம் அனுப்ப வேண்டியும் இவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மறுபுறம் சாந்தன் உடல் நிலை மோசமாகி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தாங்கள் மீண்டும் தாயகம் செல்ல பாஸ்போர்ட் வழங்கி உதவிடுமாறு திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகனின் மனைவி நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் முருகன் பாஸ்போர்ட்டை பெற சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்குச் சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் இன்று (மார்ச் 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக நாளை (மார்ச் 13) அனுமதி பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், முருகனைத் தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்லக் கோரிக்கை வைத்த நிலையில், நாளை அவர்களையும் அழைத்துச் செல்ல உள்ளதாகக் கூறினார்.
இதற்காகக் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக இருப்பதாகவும், நாளை (மார்ச்.13) அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி முகாமிலிருந்து புறப்பட்டு 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நளினி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் மீது உரசிய லாரி.. 4 பேர் உயிரிழந்த சோகம்