சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் தினந்தோறும் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு மதியம் 1.15 மணிக்குச் சென்றடையும். அதன் பின்பு அந்த விமானம் இலங்கையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேரும்.
இந்நிலையில், இன்று சென்னை - இலங்கை, இலங்கை - சென்னை ஆகிய 2 ஏர் இந்தியா பயணிகள் விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. நிர்வாக காரணங்களால் இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், போதிய பயணிகள் இல்லாததால் இந்த இரு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளின் விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 5.15 மணிக்கு 98 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் இன்று காலை 7.30 மணி அளவில் அந்தமான் வான்வெளிக்குச் சென்றபோது அங்கு பலத்த சூறைக்காற்று வீசிக்கொண்டு மோசமான வானிலை நிலவியது.
இதனையடுத்து, விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது. ஆனால், அந்தமானில் வானிலை சீரடையவில்லை. உடனே விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். அதில் விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, அந்த விமானம் இன்று மதியம் சென்னைக்கு திரும்பி வந்து தரை இறங்கியது.
இதற்கு இடையே அந்தமானிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வருவதற்காக 128 பயணிகள் அந்தமான் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், விமானம் அந்தமானில் தரை இறங்காமல் சென்னை திரும்பி வந்து விட்டதால் 128 பயணிகள் அந்தமானில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், அந்த விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் நாளை காலை அந்தமான் புறப்பட்டுச் செல்லும் என்றும் சென்னை விமான நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பயணிகள் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் மற்ற விமானங்கள் வழக்கம் போல் சென்று அங்கு தரையிறங்குவது எப்படி? இந்த விமானம் மட்டும் ஏன் தரையிறங்க முடியவில்லை? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அதிகாரிகள் வானிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறும். இந்த விமானம் தரை இறங்கச் சென்றபோது அங்கு மோசமான வானிலை நிலவியதால் பயணிகள் பாதுகாப்பு கருதி விமானம் திரும்பி வந்துவிட்டது. நீங்கள் இதே விமான டிக்கெட்டில் நாளையோ அல்லது உங்களுக்கு விருப்பப்பட்ட தேதியிலோ பயணம் மேற்கொள்ளலாம் என்று கூறி சமாதானம் செய்தனர். அதன் பின்பு பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் இருந்து, இலங்கைக்கு சென்று- திரும்ப இருந்த 2 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாலும்,அதேபோல் அந்தமான் வரை சென்ற விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியதாலும், இந்த விமானகளில் பயணம் மேற்கொண்ட பயணிகள் வாக்குவாததில் இறங்கியதால், சென்னை விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஓசூரில் கிரீன்பீல்ட் ஏர்போர்ட்டுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்.. பணிகளைத் தொடங்கிய தமிழக அரசு!