திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவர் தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைந்திருக்கும் பிரபல அசைவ உணவகத்தில் உணவு சாப்பிடச் சென்றுள்ளார்.
அப்போது குடும்பத்தினர் அனைவரும் பிரியாணி ஆர்டர் செய்த நிலையில், அதோடு தந்தூரி சிக்கனும் ஆர்டர் செய்துள்ளனர். இந்த நிலையில், கொண்டு வரப்பட்ட தந்தூரி சிக்கன் கடுமையான துர்நாற்றம் வீசி உள்ளது. பின்னர், இது தொடர்பாக ஊழியரிடம் கேட்டபோது, தவறுதலாக வந்து விட்டது. அதனை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் எனவும், பணம் செலுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வாடிக்கையாளர்கள், இந்த உணவை நாங்கள் சாப்பிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும், இது போல் எத்தனை பேருக்கு தூர்நாற்றம் வீசும் உணவுகளைக் கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளனர். தொடர்ந்து கடையின் உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகாரும் அளித்துள்ளனர்.
பின்னர் இது குறித்து உரிமையாளரிடம் ஊழியர் பேசுகையில், இரண்டு நாட்களுக்கு முன்னாள் தயார் செய்த சிக்கனை கொடுத்ததாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளர் தொலைபேசி மூலம் நெல்லை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில், எழுத்துப்பூர்வமாக புகார் கொடுங்கள். அப்போதுதான் நடவடிக்கை எடுக்க முடியும் என கூறிவிட்டனர்.
விடுமுறை தினங்கள் என்பதால், பொதுமக்கள் சுற்றலா செல்வதும், அப்பகுதியில் உள்ள உணவகங்கள் சாப்பிட்டு வருகின்ற நிலையில், இது போன்ற கெட்டுப்போன பொருட்களை விற்பனை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உணவு பாதுகாப்புத் துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதது மக்களிடையே உள்ள நம்பிக்கையைப் போக்கும் விதமாக உள்ளதாகவும், பெரிய கடைகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்த பிரபல தயாரிப்பாளர்.. ரிவீவ் என்ன? - Uyir Thamizhukku