தஞ்சாவூர்: இந்த ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக, முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் 'தளபதி விஜய் கல்வி விருது' வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, நேற்று இரவு (வியாழக்கிழமை) விஜய் ரசிகர்கள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக கும்பகோணத்தில் அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், விஜய் விருது வழங்கும் விழா மற்றும் விஜயின் 50-வது பிறந்தநாளை ஒட்டி சிறப்பு பூஜை செய்தனர்.
அப்போது, விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற வேண்டும் எனவும், தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரார்த்தனையினை முன்வைத்து, எம்ஜிஆர் தீபன் தலைமையிலான விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் இணைந்து தங்கத்தேரை இழுத்தனர்.
மேலும், உற்சவர் பாலசுப்பிரமணியசுவாமி தங்க ரதத்தில் சிறப்பு பட்டாடை, விசேஷ மலர் மாலைகளுடன் எழுந்தருளினார். பிறகு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரை நாதஸ்வர மேளதாள வாத்தியங்கள் முழங்க, எம்ஜிஆர் தீபன் தலைமையிலான விஜய் ரசிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து இழுத்துச் சென்றனர்.
அப்போது, "நாளைய முதலமைச்சர் விஜய், 2026ல் தமிழக முதலமைச்சர் விஜய்" என முழக்கங்கள் எழுப்பியபடி தங்கத்தேரை பிரகாரங்களில் இழுத்துச் சென்றனர். இந்த நிகழ்வில், தஞ்சை மாவட்ட தலைவர் விஜய் சரவணன், கும்பகோணம் மாநகர தலைவர் தங்கதுரை, பொருளாளர் பிலிக்ஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: படிக்கும்போதே மறைமுக அரசியலில் ஈடுபடுங்கள்: த.வெ.க. தலைவர் விஜய் கருத்து