சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவகுமார் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடையவர் ரோகித். இவர் ரவுடி மதுரை பாலா என்கிற கூலிப்படை தலைவனுடைய கூட்டாளி எனவும் கூறப்படுகிறது. மேலும் ரோகித் மீது ஆள் கடத்தல், மாமூல் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பிறகு ரவுடிகளை ஒடுக்குவதற்கும் தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்வதற்கும் போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில்தான் தலைமறைவாக இருந்த ரவுடி ரோகித் என்பவரை பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் டிபி சத்திரம் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ரோகித்தை சுற்றி வளைத்து போலீசார் பிடிக்க முயன்ற போது, ரவுடி ரோகித் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் தலைமை காவலர் சரவணன் என்பவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதில் காவலர் சரவணன் காயமடைந்தார். மேலும் போலீசாரை தாக்கிவிட்டு ரவுடி ரோகித் அங்கிருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் அவரது வலது காலில் சுட்டு கைது செய்துள்ளனர். இதையடுத்து காயம் அடைந்த காவலரை மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சுட்டுப் பிடித்த ரவுடியையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "மின் கட்டண உயர்வால் ஜவுளித் தொழில் பாதிப்பு.. அரசு என்ன செய்கிறது?"- சிபி ராதாகிருஷ்ணன் கேள்வி! - CP Radhakrishnan