சென்னை: அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சபாநாயகர் அப்பாவு-க்கு எதிராக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் செப்டம்பர் 9ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
அதனால், அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய சபாநாயகருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையைத் தொடரும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, வழக்கின் விசாரணையை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அப்பாவு மீதான அவதூறு வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செப்டம்பர் 9ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்