சென்னை : சென்னை காம்தார் நகருக்கு 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்' என்று பெயர் சூட்ட வேண்டும் என எஸ்.பி.பி.சரண் முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
அதில், "நீண்ட நெடுங்காலமாக சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து, அவர்களின் மாறாத அன்பைப் பெற்ற மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவர் இறுதி மூச்சுவரையில் நீண்ட காலம் வாழ்ந்த சென்னை காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியினை 'எஸ்.பி பாலசுப்ரமணியம்' நகர் அல்லது வீதி என பெயர் மாற்றம் செய்திட உரிய ஆவண செய்ய வேண்டும்.
மேலும், அவருடைய ரசிகன் என்ற முறையிலும், மகன் என்ற முறையிலும் என் சார்பிலும், எனது குடும்பத்தினர் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும் வேண்டுதலும் இதுவே" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : சென்னை வெள்ளம்; 'கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலைகளை உருவாக்கலாமே'.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து! - guindy race club land
எஸ்.பி.பாலசுப்ரமணியம் : ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட எஸ்.பி.பாலசுப்பரிமணியம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியுள்ளார். தான் பாடிய திரைப்பாடல்களுக்காக 6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதும், கடந்த 2001ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2021ம் ஆண்டு பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.