சென்னை: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு இன்றைய வழக்குகளை விசாரித்தபோது, கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக தனது கவலையைத் தெரிவித்தது.
மேலும் இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அதனை விரைவில் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரிகள், சாலைகள், கட்டுமானத் திட்டங்கள் குறித்த விபரங்களைத் தயார் செய்யுமாறு கேரள அரசு வழக்கறிஞரை தீர்ப்பாயம் வலியுறுத்தியது.
இதனிடையே, வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவை அடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்டும் நிவாரணப் பணிகளுக்கான முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வயநாடு நிலச்சரிவில் சுமார் 350 பேர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படும் முண்டக்கை பகுதிக்கு தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ராணுவ மருத்துவ குழுவும் அப்பகுதிக்கு விரைந்துள்ளது. மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியனும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!