சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது, கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஏற்கனவே கோவை போலீசார் மற்றும் தேனி போலீசார் தனித்தனியாக காவலில் எடுத்து சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுக்கு சங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏவின் போலியான ஆவணங்களைத் தயாரித்து அவதூறு பரப்பியதாக மோசடி, போலி ஆவணங்களை புனைதல், போலி ஆவணங்கள் மூலம் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உட்பட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் கடந்த மே 11 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக போலீசார் கோவையிலிருந்து சவுக்கு சங்கரை சென்னை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து ஆஜர் படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், '' காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மகனுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படவில்லை. தனது மகன் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படவில்லை. சட்டப்படியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது'' என கூறி குண்டாஸை ரத்து செய்ய வேண்டும் என்று கமலா கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் '' சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவின் அசல் ஆவணங்களை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும்" என காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காசு வாங்கிட்டு என் 17 வயது மகளைப் பற்றி''... சவுக்கு சங்கர் மீது கனியாமூர் மாணவியின் தாய் பரபரப்பு புகார்