கோயம்புத்தூர்: கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 97 வார்டுகளை கைப்பற்றியன. அதிமுக வெறும் 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து, அப்போது கோவை பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 19 வது வார்டு உறுப்பினர் கல்பனா ஆனந்த் குமாரை மேயராக பரிந்துரை செய்ததன் பேரில் திமுக தலைமை ஒருமனதாக கல்பனாவை வெற்றி பெற செய்தது.
மேயராக பொறுப்பேற்ற கல்பனா, அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு முன்னும், பின்னும் திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே மோதல் போக்கை கடைப்பிடித்து வந்ததாலும், கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டல தலைவர்களுடனும் மூத்த மாமன்ற உறுப்பினர்களுடனும் மோதல் போக்கையே கடைபிடித்து வந்ததாலும் அவர் மீது திமுக தலைமைக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றன.
மேலும், மாநகராட்சியில் விடப்படும் டெண்டர்கள் தனக்கு மட்டுமே தர வேண்டும் என மூத்த அமைச்சர் கே என் நேருவுடன் மேயர் நேரடியாக மோதல் போக்கை கையாண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாமன்ற உறுப்பினர்களும், மூத்த அமைச்சரும், திமுக தலைமையிடம் மேயர் நடவடிக்கைகள் குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து அவரை மாற்ற தலைமை முடிவு செய்தது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வந்த நிலையில், அப்போது அதனை தற்காலிகமாக கைவிட்ட திமுக தலைமை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவரை மாற்ற அதிரடியாக முடிவு செய்து கல்பனாவிடமிருந்து ராஜினாமா கடிதத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது.
மேயர் கல்பனா கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ஆட்கள் மூலம் இன்று ராஜினாமா கடிதத்தை கொடுத்து அனுப்பினார். அதில் தனிப்பட்ட காரணத்திற்காகவும் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உறுதிப்படுத்திய நிலையில் கோவை மாநகராட்சியின் அடுத்த பெண் மேயர் யார் என்பது குறித்து அனைத்து தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மேயர் பதவிக்கு தற்போது மத்திய மண்டல தலைவராக உள்ள மீனா லோகு, கிழக்கு மண்டல தலைவராக உள்ள இலக்குமி இளஞ்செல்வி, மேற்கு மண்டல தலைவராக உள்ள தெய்வானை தமிழ்மறை ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனாலும் கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரான தனபாலின் மனைவியும், கோவை மாநகராட்சி 27 ஆவது வார்டு கவுன்சிலருமான அம்பிகா தனபால் மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், இளைஞர் அணி அமைப்பாளராக தனபால் உள்ளதால், அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனான நேரடி தொடர்பு காரணமாக அம்பிகா தனபால் மேயராக தேர்வு செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ஆனந்த் ராஜினாமா.. பின்னணியும் சர்ச்சைகளும்! - Coimbatore Mayor Kalpana resigned