சென்னை: தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய், தனது படங்களில் இடம் பெறும் வசனங்கள் மூலம் தனது அரசியல் வருகையை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வரும் இவர், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
திரைத்துறையில் தனக்கான தனி இடத்தையும், கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்ட நடிகர் விஜய்யின் இந்த அரசியல் பயணம், அரசியல் கட்சிகள் மத்தியிலும், ரசிகர்கள் இடையேயும் பல கேள்விகள் மற்றும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. அதற்கு பதிலளிக்கும் வகையில், இது தொடர்பாக மூன்று பக்க அறிக்கையினை வெளியிட்டு, அரசியலில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்திருந்தார், விஜய்.
அதில், 2026 சட்டமன்றத் தேர்தல் தான் தற்போதைய இலக்கு என்றும், கையில் இருக்கும் படத்தை முடித்து விட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும்அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் தனது 'தவெக' என்ற புதிய கட்சியைப் பதிவு செய்து ஒப்புதலுக்காக காத்திருக்கும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜய், தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியப் பின், தவெக கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலி வாயிலாக, உறுப்பினர் சேர்க்கை முகாம்களை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும், கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து, பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, உறுப்பினர் சேர்க்கை அடிப்படையில் மட்டுமே கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் எனவும், இந்த உறுப்பினர் சேர்க்கை பணிகள் முடிந்த பின்னரே, கட்சி பொறுப்பாளர்கள் நியமனப் பணிகள் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து, மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி உருவாக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த காலங்களில் தவெக அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதற்காக வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான அந்த சிறப்பு செயலி அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தவெக கட்சியைச் சேர்ந்தவர்கள் மாற்று கட்சிகளின் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது எனவும், சிறப்பு செயலி அறிமுகமானதும், உறுப்பினர் சேர்க்கையில் மட்டும் கவனம் செலுத்தவும் தலைமைக் கழகம் அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!