கோயம்புத்தூர்: பாஜக பாதை வேறு, நாதக பாதை வேறு, ஒன்றாக பயணிக்க ஒரு கோடு கூட இல்லை. தமிழக அரசியலில் சூப்பர் ஸ்டார் வாக்காளர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது மூன்று மாத அரசியல் படிப்பை லண்டனில் முடித்துவிட்டு நேற்று (டிச.01) ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, சென்னையிலிருந்து கோவைக்கு சென்ற அவ்ருக்கு பாஜக தொண்டர்கள் மலர் தூவி மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “புதுச்சேரியில் 20 ஆண்டுகாலம் இல்லாத மழை தற்பொழுது பெய்துள்ளது. மத்திய அரசு சார்பில் உயர்மட்ட அமைச்சர் வந்து ஆய்வுப் பணிகளை ஒருவாரத்திற்குள் மேற்கொள்வார்கள். 3 மாதத்தில் தமிழ்நாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகியுள்ளார், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2026 தேர்தல் வித்தியாசமான அரசியல் களமாக இருக்கும்.
பாஜகவில் தற்பொழுது அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. 3 மாதங்களில் பாஜகவினர் வெளிவேலைகளை குறைத்துக்கொண்டு கட்சிக்குள் அமைப்பு வேலைகளை செய்து வந்துள்ளனர். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் குறைந்துள்ளது. நடிகர் விஜய் அதிகபடியாக திராவிட சித்தாந்தத்தை பேசியுள்ளார். 2026 தேர்தலை எங்கள் ஆண்டாக பார்க்கிறோம். விஜயின் வருகை புதிதல்ல. ஆனால், விஜய்யின் சித்தாந்தம் புதிது. விஜய் மக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேச வேண்டும். அப்பொழுதுதான் அவரது கொள்கை நிலை தெரியவரும்.
இதையும் படிங்க: விஜயின் அரசியல் வருகை: லண்டனிலிருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை சொன்னது என்ன?
திமுக குடும்ப அரசியல் என்பதை, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து ஒப்புக்கொண்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த வலதுசாரி ஆதரவாளரோ, பாஜக ஆதரவாளரோ கிடையாது. அவர் பிரதமர் மோடியின் மீது மரியாதை வைத்துள்ளவர். அவரை சிறிய வட்டத்திற்குள் ஆதரவாளர் என்று கூறுவது சரியல்ல. சீமானை அரசியல்வாதியாக மதிக்கிறேன். ஆனால், அவரது பாதை வேறு எங்களுடைய பாதை வேறு. ஒன்றாக பயணிக்க ஒரு கோடு கூட இல்லை. தமிழக அரசியலில் சூப்பர் ஸ்டார் வாக்காளர்கள்.
விஜய்/ உதயதிதி ஸ்டாலின்/ அண்ணாமலை: விஜய் பெரும் நடிகராக வலம் வருகிறார். அவருக்கு சிறியவரகள் முதல் பெரியவர்கள் வரை அதிக ரசிகர்கள் உள்ளனர். என்னுடைய குடும்பத்திலும் விஜய் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், ஓட்டு போடுவார்களா என்பது வேறு. உதயநிதிக்கு அனைத்தும் எளிதாக கிடைக்கிறது. பாஜக, தொண்டர்கள் சார்ந்த அரசியலை முன்னெடுத்துள்ளோம்.
சட்டம் ஒழுங்கு: பல்லடத்தில் 3 பெர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரிவாள் கலாச்சாரம் புதியதாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. தமிழக காவல்துறை ஆளுமை உள்ள காவல்துறை. ஸ்காட்லாந்துக்கு இணையான உள்ள தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.
சூலூரில் பெட்ரோல் பைப்லைன் விவகாரத்தில் விவசாயிகள் கூறுவது நியாயம். விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பது தொடர்பாக பெட்ரோலிய துறை அமைச்சர் அலுவலகத்தில் பேசப்பட்டுள்ளது. வரும் 10-ஆம் தேதி பாஜக சார்பில் டெல்லிக்கு சென்று பேசவுள்ளோம். மதுரையில் டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த திட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார். மத்திய அரசின் திட்டங்களை வேண்டுமென்று தமிழக அரசு எதிர்கிறது. இதனால், தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய பலன்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வயநாடு தேர்தல் முடிவுகள் குறித்தான கேள்விக்கு, “ பிரியங்கா காந்தி எதற்கு வந்துள்ளார்கள் என்றால் ராகுல் காந்தியால் காங்கிரஸ் எழுச்சி பெறாது என்பதால். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 எம்பிக்கள் இருப்பது இதுவே முதல் முறை. வயநாடு தேர்தல் வெற்றி என்பது காங்கிரஸ் கூட்டணி உடைவதற்கு முதல் படி. அதானி விவகாரம் குறித்து இரண்டு நாட்களில் தரவுகளோடு பேசுகிறேன். விஸ்வகர்மா விவகாரத்தில் தமிழக அரசு வேண்டும் என்றே திட்டத்தை வேண்டாம் என கூறுகிறார்கள்” என்றார்.