சென்னை: சென்னையில் கடந்த பிப்.8ஆம் தேதி 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வந்த வெடிகுண்டு மிரட்டலால், தமிழக முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து அனைத்து தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்களைப் பத்திரமாக வெளியே அப்புறப்படுத்தி மோப்ப நாய்கள் உதவிகளுடன் போலீசார் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. பின்னர், வெடிகுண்டு விரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது தொடர்பாக, சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகார் தொடர்பாக மத்திய சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.
பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மெயில் சுவிட்சர்லாந்து நாட்டின் புரோட்டான் என்ற நிறுவனத்தின் மூலமாக விபிஎன் பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விபிஎன் பயன்படுத்தி மர்ம நபர் மெயில் அனுப்பி இருப்பதால் அந்த நபர் யார் என்பதைக் கண்டுபிடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து அந்த மெயில் அனுப்பிய நபர் இருக்கும் முகவரியைக் கேட்டு சென்னை போலீசார் சிபிசிஐடி நோடல் அதிகாரிகள் மூலமாக இன்டர் போல் உதவியை நாடி கடிதத்தை அனுப்பி இருந்தனர். ஆனால் இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த இமெயில் சேவையை இந்தியாவில் முடக்கச் சென்னை போலீசார் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், இமெயில் அனுப்பிய நபரின் ஐபி முகவரி பல்வேறு நாடுகளில் மாறி மாறி காட்டுவதால் அந்தந்த ஐபி முகவரிகளை வாங்கி சென்னை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, இந்த விவகாரம் போலவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூருவில் 15க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்டது. இந்த இமெயில் விவரங்கள் குறித்து பெங்களூரு போலீசார் கண்டுபிடித்த தகவலையும் பெற்று ஒரே நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் சென்னை மத்திய சைபர் க்ரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் தொடர்ந்து இமெயில் மூலம் மிரட்டல் விடும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்களை முடக்கும் வகையில் மத்திய சைபர் க்ரைம் போலீசார் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தின் இன்டர்போர்ட் நோடல் அதிகாரி சிபிசிஐடி பிரிவில் பணியாற்றுவதால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கிப் பலி.. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த சோகம்!