சென்னை: கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விருப்ப ஓய்வு பெற்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தான் விருப்ப ஓய்வு பெற்றதற்கான காரணத்தை விளக்கி, மோகன்ராஜ் தற்போது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "அமெரிக்காவில் உள்ள தமது மகள் மற்றும் மருமகளின் பிரசவத்தை கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தின் பேரில் எனது மனைவியுடன் நான் அங்கு செல்ல வேண்டி இருந்தது. அதன் காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றேன். ஆனால், எனது இந்த முடிவு குறித்து, தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள துயரகரமான சம்பவத்தை தொடர்புப்படுத்தி சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றார்கள்,"என்று மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், "கள்ளக்குறிச்சியில் நடந்த இத்துயர சம்பவத்தை தொடர்புப்படுத்தி, கள்ளச்சாராயத்துக்கு பயந்து நான் பணி ஓய்வு பெற்றதாக, விரும்பத்தகாத, உண்மைக்கு புறம்பான பொய் செய்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. எனவே, இத்தகவல்களை தொடர்ந்து சமூக ஊடகங்களிலோ, வலைதளங்களிலோ பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்" என்று மோகன்ராஜ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:"இனியாவது முதலமைச்சர் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்" - தவாக தலைவர் வேல்முருகன்!