சென்னை: வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கடந்த மார்ச் மாதம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26ஆம் தேதி திகார் சிறையில் கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி அமலாக்கத்துறை தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்படி, ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சட்டவிராத பணப் பரிமாற்றம் தொடர்பாகவும், வங்கி பரிவர்த்தனைகள் குறித்தும் ஆய்வு செய்து விசாரணை நடத்த இன்று ஆஜராகும் படி ஜாபர் சாதிக்கின் சகோதரர் மைதீனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி, அவர் தற்போது விசாரணைக்கு ஆஜராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் சகோதரர் மைதீன் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார்.
முன்னதாக, நேற்று ஜாபர் சாதிக் மனைவி அமீனா பேகத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்கு மூலங்களை பதிவு செய்தனர். மேலும், ஜாபர் சாதிக் பினாமிகளான ஜோசப் மற்றும் ஆயிஷா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் பரிமாற்றம்? - பெண் வழக்கறிஞரிடம் விசாரணை! - armstrong murder case